புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர் வாகிகள் நேற்று ஒரு நாள் உண் ணாவிரதம் மேற்கொண்டனர்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங் கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேஜ்ரிவால் இப்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும் என ஆம் ஆத்மிகட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கோபால்ராய் அறிவித்திருந்தார்.
இதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று காலை 11 மணி முதல் மாலை வரை ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில், டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிர்லா, அமைச்சர்கள் ஆதிஷி, கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பகவந்த் மான் பங்கேற்பு: இதுபோல பல்வேறு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றார்.
இதுதவிர, அமெரிக்காவின் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், கனடாவின் டொரன்டோ, இங்கிலாந்தின் லண்டன், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.