வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், வைத்திரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஜேஎஸ் சித்தார்த்தன் (20) என்ற மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி அவரது உடல் விடுதி கழிவறையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கூறும்போது, ‘‘இந்திய மாணவர் சம்மேளனம் (எஸ்எப்ஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள், சித்தார்த்தனை 29 மணி நேரம் சித்ரவதை செய்து அடித்து உதைத்துள்ளனர். பெல்ட்டால் தாக்கி உள்ளனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட சித்தார்த்தனை தற்கொலைக்கு தூண்டி விட்டுள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினர். மேலும், கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதே கருத்தை வைத்திரி சப் இன்ஸ்பெக்டர் பிரஷோப்பும் பின்னர் கூறினார்.
வைத்திரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ 20 பேர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து விசாரிக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக எஸ்எப்ஐ மற்றும் மார்க்சிஸ்ட் மாணவர் பிரிவைச் சேர்ந்த சீனியர் மாண வர்கள், சித்தார்த்தனின் வகுப்பு தோழர்களிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த பிப்ரவரி 16-ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் 17-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து சித்தார்த்தன் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகும் ‘ரேகிங்’ தொடர்ந்துள்ளது. உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த சித்தார்த்தன், 18-ம் தேதி பிற்பகல்1.45 மணிக்கு விடுதி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன்கடந்த மார்ச் 9-ம் தேதி அறிவித்தார். ஆனால், ஒரு வாரமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக.வினர் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும், ‘‘ஆளும் அரசு வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வருகிறது. சித்தார்த்தன் மரணம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க பார்க்கிறது’’ என்று பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் விரைவில்சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக, மாணவரின் பெற்றோரிடம் என்டிஏ சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி அளித்தார். பிரச்சினை பெரிதான நிலையில் தற்போது வழக்கை சிபிஐ.யிடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.