இந்தியா

டிடி சேனலில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்பும் முடிவை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனல் கைவிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசுத் தொலைக்காட்சி சேனலானது பாஜக - ஆர்எஸ்எஸ் பிரச்சார இயந்திரமாக மாறக் கூடாது என்று அவர் கண்டித்துள்ளார்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரிவினை பாகுபாட்டை உருவாக்கக் கூடிய சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஒளிபரப்பும் டிடி நேஷனலின் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய ஒலிபரப்புத் துறை பாஜக ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை பரப்பும் இயந்திரமாக மாறக் கூடாது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக வகுப்புவாத கலவர பதற்றத்தை அதிகரிக்கும் சாத்தியமுள்ள இதுபோன்ற படங்களை ஒளிபரப்பும் முடிவுகளை தவிர்க்க வேண்டும். வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை எதிர்ப்பதில் கேரளா தீவிர முனைப்புடன் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இடது முன்னணி எதிர்ப்பு: இதனிடையே, தூர்தர்ஷனின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் முக்கிய கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ‘இது கேரள மக்களை அவமதிக்கும் செயல்’ என்று கூறியுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழும் கேரளாவில் மதக் கலவரம், பிரிவினைவாதத்தை தூண்டும் பாஜகவின் முயற்சிக்கு தூர்தர்ஷன் துணை போகக் கூடாது. அந்தப் படம் (தி கேரளா ஸ்டோரி) கேரளா மக்களை அவமதிக்கிறது.

தூர்தர்ஷன் வெள்ளிக்கிழமை (ஏப்.5) இரவு 8 மணிக்கு அந்தத் திரைப்படத்தை ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. இது கேரளாவுக்கான சவால். அந்தப் படம் வெளியான போதும் சரி, சுமார் 32,000 பெண்கள் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டார்கள் என்ற பொய்யுரைத்து படத்தின் ட்ரெயிலர் வந்தபோதும் சரி கடும் எதிர்ப்பு உருவானது.

மத்திய தணிக்கை குழுவும், கேரளா தீவிரவாதத்துக்கான சொர்க்கபுரி என்று பிழையாக பிரச்சாரம் செய்யும் 10 தவறான காட்சிகளை நீக்க பரிந்துரைத்திருந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை ஒளிபரப்பும் திடீர் முடிவுக்கு பின்னால் பாஜக உள்ளது. எந்தத் தொகுதியிலும் பாஜக முன்னிலை பெற முடியாது என்பதே உண்மை. இந்தச் சூழ்நிலையில், பிரிவினைவாத விஷத்தை பரப்ப தூர்தர்ஷன் முன்வந்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கேள்வி: இதனிடையே, இடது ஜனநாயக முன்னணியினரின் எதிர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் முரளீதரன், "கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான உரிமையை நமது அரசியலமைப்பு வழங்குகிறது. இடதுசாரிகள் தங்களை எப்போதும் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பவர்களாகக் கூறிக் கொள்கிறார்கள். அப்படியென்றால் இதுபோன்ற படங்கள் ஒளிபரப்பப்படும்போது அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். தி கேரளா ஸ்டோரி படம் சென்சார் போர்டின் அனுமதியைப் பெற்றுள்ளது. அது ஒரு கலை படைப்பு, அந்தப் படத்தில் ஒரு கலை அனுபவம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரியும் சர்ச்சையும்: சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா சர்மா, சித்தி இட்னானி , சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியாகி வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெய்லரில். கேரளாவில் காணாமல் போன 32 ஆயிரம் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டனர் அல்லது பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்ற பொய்த் தகவலுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல மாநிலங்களில் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மம்தா பானர்ஜி ஆளும் மேற்குவங்க மாநிலம் படத்தை திரையிடுவதற்கு தடை விதித்திருந்தது.

நாட்டிலுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. கேரளாவில் ஏப்.26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT