கவுரவ் வல்லப் 
இந்தியா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் திடீர் விலகல்: காரணம் என்ன?

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செய்தித் தொடர்பாளர் கவுவரவ் வல்லப் ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கவுரவ் வல்லப் தனது ராஜிமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார்.

இரண்டு பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “கட்சி இலக்கே இல்லாமல் பயணிப்பதால் அதில் அசவுகரியமாக உணர்வதால் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய கடிதத்தின் விவரம் வருமாறு: ''திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்பவர்களை அவதூறு பேசவோ என்னால் முடியாது. அதனால் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்.

கட்சி அதன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து தவறான பாதைக்குச் சென்றுவிட்டது. ஒரு பக்கம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறது. இன்னொரு பக்கம் இந்து சமூகத்தை கட்சி எதிர்க்கிறது. இந்த மாதிரியான கொள்கைகள் கட்சியைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான பார்வையை விதைக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மதத்தை மட்டுமே ஆதரிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை மக்களுக்குக் கடத்துகிறது. இது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.

காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்துமே தேசத்துக்கான வளத்தைச் சேர்ப்பவர்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. இன்று நம் மத்தியில் பொருளாதாரத்தில் தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் இருக்கின்றது. இவற்றிற்கு உலக நாடுகள் அங்கீகாரம் கொடுத்துள்ளன. நம் தேசத்தில் தொழில் செய்து பணம் ஈட்டுவது அத்தகைய பெரிய தவறா என்ன?

நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது எனது இலக்கு என்னுடைய திறமையை பொருளாதார விவகாரங்களின் மீது நாட்டு நலன் சார்ந்து செலுத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும். பொருளாதாரப் பார்வைகள் கொண்ட ஒரு தேர்தல் அறிக்கையைக் கொடுத்திருக்கலாம். ஆனால் கட்சியில் இது எடுபடவில்லை. என்னைப்போன்ற பொருளாதார பார்வை கொண்ட நபரை அழுத்தி மூச்சுமுட்டச் செய்திருக்கிறார்கள்.'' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கவுரவ் வல்லப் முதன்முதலில் 2019ல் ஜார்க்கண்ட் மாநில ஜம்ஷட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தேர்தல் அரசியல் களம் கண்டார். 2023 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கவுரவ் வல்லப் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.

முன்னதாக நேற்று (புதன் கிழமை) கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சஞ்சய் நிருபமை காங்கிரஸ் கட்சி நீக்கியது. கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் அவரை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT