கோப்புப்படம் 
இந்தியா

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 7-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி உண்ணாவிரத போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை கண்டித்துஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கவுன்சிலர்கள் ஜந்தர் மந்தரில் வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நாட்டு மக்களும் வீட்டிலிருந்தே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கலாம். இந்த போராட்டத்தை பதிவு செய்வதற்காக தொடங்கப்படும kejriwalkoashirwad.com என்ற இணையதளத்தில் மக்கள் தங்கள் உண்ணாவிரத போராட்ட படங்களை பதிவேற்றலாம். தங்களது கருத்துகளை பகிரலாம். ஜனநாயகத்தை காப்பாற்றவும், நாட்டை நேசிப்பவர்களும் இந்த போராட்டத்தில் கைகோக்க வேண்டும். அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவாலின் கைதை கண்டித்து செய்திகளை பதிவிடும் வகையில் வாட்ஸ் அப் எண்ணை கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் எண் செயலிழந்தது. இதன் காரணமாக தற்போது உண்ணாவிரத பிரச்சாரத்தின் படங்களை பதிவேற்றம் செய்ய புதிதாக இணையதளம் உருவாக்கப்படுகிறது.

டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கேஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைதான பிறகுஅவரது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தீவிர நீரிழிவுநோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட அவரது உடல் எடை வெறும் 12 நாட்களில் 4.5 கிலோ வரை குறைந்துள்ளது.

இது மிகுந்த கவலை அளிக்கிறது. இருப்பினும் அல்லும் பகலும் 24 மணி நேரமும் அவர் நாட்டுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏதேனும் அசம்பாவிதம் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நிகழ்ந்துவிட்டால் கடவுளே இவர்களை மன்னிக்கமாட்டார். அர்விந்த் கேஜ்ரிவாலையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க பாஜக எந்த எல்லை வரையும் செல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT