மக்களவைத் தேர்தலையொட்டி மாநிலங்களுக்கான சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மாநிலங்களில் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது 6 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர்களையும், 5 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பிஹாருக்கு ஐஏஎஸ் அதிகாரி மன்ஜித் சிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விவேக் தூபே ஆகியோரும், மகாராஷ்டிராவுக்கு எஸ். தர்மேந்திரா கங்குவார், என்.கே. மிஸ்ரா ஆகியோரும், உத்தரபிரதேசத்துக்கு அஜய் என். நாயக், மன்மோகன் சிங் ஆகியோரும், ஆந்திராவுக்கு ராம் மோகன்ரா, தீபக் மிஸ்ரா ஆகியோரும், ஒடிசாவுக்கு யோகேந்திர திரிபாதி, ரஜினிகாந்த் மிஸ்ரா ஆகியோரும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அனில் குமார் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தேர்தல் செலவு கண்காணிப்பாளர் மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கு கண்காணிக்க ராஜேஷ் துடேஜா (உத்தரபிரதேசம்), ஹிமாலினி காஷ்யப் (ஒடிசா), பி. முரளிகுமார் (கர்நாடகா), நீனா நிகம் (ஆந்திரா), பி.ஆர்.பாலகிருஷ்ணன் (தமிழ்நாடு) ஆகியோர் சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே முன்னாள் ஐஆர்எஸ் (வருவாய்பிரிவு) அதிகாரிகள் ஆவர் என்று தேர்தல் ஆணைய மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.