ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா நகரில் போலீஸாருடன் தனி குருத் வாரா கமிட்டி ஆதரவாளர்கள் புதன்கிழமை மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் உள்ள சீக்கிய குருத்வாராக்களை, அமிர்தசரஸில் உள்ள சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் ஹரியாணாவில் உள்ள 30 குருத்வாராக்களை நிர்வகிப்பதற்காக தனியாக ஹரியாணா மாநில குருத்வாரா நிர்வாக கமிட்டி (எச்.எஸ்.ஜி.எம்.சி) ஏற்படுத்தி, அம்மாநில அரசு சட்டம் இயற்றியது. இதற்கு பஞ்சாபில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பஞ்சாபின் ஆளும் சிரோமணி அகாலிதளம் (எஸ்.ஏ.டி) கட்சியும் எஸ்.ஜி.பி.சி. அமைப்பும் முன்னின்று எதிர்த்து வருகின்றன. இரு தரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை தொடருகிறது.
இதனிடையே தனி குருத்வாரா கமிட்டி ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை, ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா நகரில் உள்ள செவின் பட்ஷாகி குருத்வாரா முன் அமர்ந்து, அதனை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி தர்ணா செய்தனர். இவர்களின் போராட்டம் புதன்கிழமை 5-வது நாளாக நீடித்தது.
இந்நிலையில், போராட்டக் குழுவினர் குருத்வாராவை தங்கள் வசம் எடுப்பதற்காக வலுக்கட்டாய மாக அதனுள் நுழைய முயன் றனர். இதை போலீஸார் தடுக்க முயன்றபோது, அவர்கள் தாக்கப் பட்டனர். இதையடுத்து போலீ ஸார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டக்காரர்களை விரட்டினர்.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக குருஷேத்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் ஷென்வி கூறினார்.
இந்நிலையில் போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம் சாட்டிய எச்.எஸ்.ஜி.எம்.சி. துணைத் தலைவர் திதார் சிங் நல்வி, தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்றார்.
இதனிடையே மற்றொரு சம்பவமாக, குருஷேத்ரா அடுத் துள்ள கைதல் மாவட்டம், குஹ்லசீகா என்ற இடத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நவின் பட்ஷாஹி குருத்வாராவை, எச்.எஸ்.ஜி.எம்.சி. உறுப்பினர்கள் புதன்கிழமை தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர்.