ரயில்வேத் துறையின் செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது என்றும் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளில் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.
ராணுவம், ரயில்வே உள்ளிட்டத் துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஒரு சில சேவைகளில் 100% வரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, "தேசிய அளவில் பொது மக்களால் போக்குவரத்துக்காக பயன்ப்படுத்தப்படும் ரயில்வே துறையின் செயல்பாடுகளில் அன்னிய நேரடி முதலீடு முற்றிலுமாக அனுமதிக்கப்படாது.
முதலில் ரயில்வேத் துறையால், எந்த அளவு அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியும் என்பதை சில மாதங்கள் காத்திருந்து தான் சொல்ல முடியும். ரயில்வேத் துறையின் உள்கட்டமைப்பு போன்றவற்றில் தான், அன்னிய முதலீட்டை பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில்வேத் துறையில், அன்னிய முதலீட்டை கொண்டுவருவதால், துறைக்கான பொருளாதாரம் தாராளமடையும். இதன் மூலம் நவீனமயமாக்குதலும் பல புதிய சேவை திட்டங்களுக்கும் உதவ முடியும். ரயில்வேத் துறையில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
தரக்குறைவான உணவு வழங்கும் பணியாளர்கள், அதனை தயாரிக்கும் சமையல்காரர்கள் மீது அபராதம் விதிப்பது என்பது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
ரயில்வேத் துறையில் சுமார் ரூ.29,000 கோடி அளவில் நிதி தட்டுபாடு நிலவுவதாகவும், அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் இந்த பற்றாக்குறையை தீர்க்க வாய்ப்பு இருக்கும் என கருதப்படுகிறது.