இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பாதை: வீடியோ வெளியிட்டார் அஸ்வினி வைஷ்ணவ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புல்லட் ரயில் இயக்குவதற்காக இந்தியா அமைத்து வரும் "பேலாஸ்ட்லெஸ் டிராக்" எனும் புது வகை ரயில் பாதை பணிகள் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான ‘‘பேலாஸ்ட்லெஸ் டிராக்" என்ற புது வகையான ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 508 கி.மீ. தூரத்துக்கு இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் 295.5 கி.மீ. தூரத்துக்கு தூண்கள்அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

ஏற்கெனவே 153 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் வழித்தட பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் 3.0 ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

புல்லட் ரயில் போன்ற அதிவேக ரயில்களை இயக்குவதற்கு பேலாஸ்ட்லெஸ் டிராக் அல்லது "ஸ்லாப் டிராக்" என்பது சில நாடுகளில் பிரபலமாக உள்ளது. ஜே-ஸ்லாப் பேலாஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று நேஷனல் ஹை-ஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (என்எச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது.

புல்லட் ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் மும்பை, தானே, வாபி,பரோடா, சூரத், ஆனந்த், அகமதாபாத் வரை அமைக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஒருவர் சூரத்தில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு மும்பைக்கு பணிக்கு சென்று இரவில் வீடு திரும்பிவிடலாம் என்று அண்மையில் வைஷ்ணவ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் பாதை மதிப்பீட்டு செலவினம் ரூ.1.08 லட்சம் கோடியாகும். இதில், ரூ.10,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தலா ரூ.5,000 கோடி பங்களிப்பை வழங்கும். எஞ்சிய தொகை ஜப்பானிலிருந்து 0.1 சதவீத வட்டியில் கடனாக பெறப்படும்.

SCROLL FOR NEXT