கர்நாடக அமைச்சர் கே.எச்.முனியப்பா | கோப்புப் படம் 
இந்தியா

கர்நாடக அமைச்சர் முனியப்பாவின் மருமகனுக்கு சீட் வழங்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக அமைச்சர் கே.எச்.முனியப்பாவின் மருமகனுக்கு தேர்தலில் சீட் வழங்குவதற்கு ஒரு அமைச்சர் உட்பட 4 எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் கே.எச்.முனியப்பா (76). இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் கோலார் (தனி) தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.

இந்நிலையில் முனியப்பா, கோலார் மக்களவைத் தொகுதியில் நான் 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறேன். எனவே என் மருமகன் சிக்க பெத்தன்னாவுக்கு சீட் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு கோலார் மாவட்ட காங்கிரஸாரும், அந்த தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சரும் சிந்தாமணி சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான‌ சுதாகர், கோலார் காங்கிரஸ் எம்எல்ஏ கொத்தூர் மஞ்சுநாத், மாளூர் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா, பங்காருபேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணசுவாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதேபோல கோலாரை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்சிக்கள் அனில்குமார், நசீர் அகமது ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முனியப்பாவின் மருமகனுக்கு சீட் வழங்கினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக 6 பேரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.சி. வலது சாதியினருக்கு வாய்ப்பு: இதுகுறித்து கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ''கே.எச்.முனியப்பா 7 முறை எம்பி ஆக இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சராக வலம் வந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோற்றதால் மாநில அரசியலுக்கு திரும்பி, இங்கும் அமைச்சராக இருக்கிறார். அவரது மகள் ரூபா கோலார் தங்கவயல் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். இப்போது தன் மருமகனுக்கும் பதவி வாங்கி தர துடிக்கிறார்.

கே.எச்.முனியப்பாவின் குடும்ப அரசியலால் கோலார் மாவட்டத்தில் யாரும் காங்கிரஸில் தலையெடுக்க முடிவதில்லை. அவர்களால் பட்டியலின சமூகத்துக்கும் கட்சிக்கும் எந்த பயனும் இல்லை. எனவே பட்டியலினத்தில் வலது பிரிவை சேர்ந்த தகுதியான நபருக்கு சீட் வழங்க வேண்டும்''என வலியுறுத்தினார்.

இதனால் காங்கிரஸ் மேலிடம் கோலார் தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT