அரவிந்த் கேஜ்ரிவால் 
இந்தியா

முதல்வராக கேஜ்ரிவால் நீடிப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இது நீதிமன்ற தலையீட்டுக்கு அற்பாற்பட்டது. அரசின் மற்றப் பிரிவுகளும் சட்டத்தின்படி ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று கூறி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிரான மனுவை நிராகரித்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரர் சுர்ஜித் சிங் யாதவின் வழக்கறிஞர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக தொடர்வது குறித்த சட்டத் தடைகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. "இந்த விவகாரத்தில் பல நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால், அது வேறு விஷயம். எனினும், இதில் சட்ட ரீதியான தடைகள் என்னென்ன?" என்று வினவியது.

‘அரசியல் சதி’ - கேஜ்ரிவால்: இதனிடையே, அமலாக்கத் துறையின் காவல் இன்று (மார்ச் 28) நிறைவடைந்த நிலையில், கேஜ்ரிவால் இன்று மதியம் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற அறைக்குச் செல்வதற்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், "இது அரசியல் சதிச் செயல், மக்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையை காண கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும், மகனும் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்து வந்திருந்தனர். அதேபோல், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கோபால் ராய் மற்றும் பல எம்எல்ஏக்களும் வந்திருந்தனர்.

முன்னதாக, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று (மார்ச் 28) வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிடுவார் என்று அவரது மனைவி சுனிதா புதன்கிழமை தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT