பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தனித்து போட்டியிடப் போவதாக பாஜக நேற்று முன்தினம் அறிவித்தது. அதே நாளில் லூதியானா மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ரவ்நீத் பிட்டு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இவர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். இந்நிலையில் பஞ்சாபின் ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஷீத்தல் அங்குரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைந்தனர்.
கடந்த ஆண்டு ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ரிங்கு, 58,691 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் அதே தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் ரிங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிக்கும் வரும் ஜூன் 1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ரிங்கு மற்றும் ஷீத்தல் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.