இந்தியா

மண்டியா தொகுதியில் குமாரசாமி: அண்ணன் மகனுக்கு ஹாசனில் வாய்ப்பு

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். ஹாசனில் அவரது அண்ணன் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு மண்டியா, ஹாசன், கோலார் (தனி) ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு ஊரக தொகுதியில் தேவகவுடாவின் மருமகன் மருத்துவர் மஞ்சுநாத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மஜத மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று கூறுகையில், “கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நான் மண்டியாவில் போட்டியிடுகிறேன். பாஜக தலைவர்களும் என்னை இங்கு போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஹாசனில் தற்போதைய எம்பி பிரஜ்வல் ரேவண்ணா (குமாரசாமியின் அண்ணன் மகன்) மீண்டும் போட்டியிடுவார். கோலார் தொகுதி வேட்பாளர் யார் என இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மண்டியாவில் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக‌ போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றார். சுமலதா மீண்டும் மண்டியாவை கேட்ட நிலையில், குமாரசாமி அதனை பெற்றுள்ளார்.

மண்டியாவில் குமாரசாமி தனது மகனை மீண்டும் நிறுத்த விரும்பினார். ஆனால் பாஜக மேலிடம் நிகிலுக்கு பதிலாக குமாரசாமியே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் தற்போது சென்னப்பட்டணா எம்எல்ஏவாக உள்ள குமாரசாமி, மீண்டும் எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார். குமாரசாமி வெற்றி பெற்றால், அதன் மூலம் காலியாகும் எம்எல்ஏ பதவிக்கு தனது மகன் நிகிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT