பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி மோசடி செய்த விவகாரத்தில் தொழிலதிபரும், வைர வியாபாரியான நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இன்று (வியாழக்கிழமை) அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தினர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்தது சமீபத்தில் வெளியே வந்தது. இதில் வைர வியாபாரி நீரவ் மோடி, அந்த வங்கியில் ரூ. 280 கோடியை ஏமாற்றியதாக அவர் மீதும், அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷார் ஆகியோர் மீது வங்கி சசார்பில் கடந்த மாதம் 29-ம் தேதி சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் கோகுல் நாத் ஷெட்டி, மனோஜ் காரத் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான வழியில் பணம் பரிவர்த்தனை செய்ததில் பல கோடி முறைகேடு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணம் பரிவர்த்தனை செய்தவகையில், ரூ.11,515 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் நீரவ் மோடியின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து அந்த வங்கி நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே இன்று காலையில் இருந்து அமலாக்கப்பிரிவு துறையினர், நிரவ் மோடியின் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், குஜராத்தின் சூரத், மும்பை, புதுடெல்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள வைரம் பட்டை தீட்டும் இடங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் கண்டுபிடிக்க விவரங்கள் குறித்து அமலாக்கப்பிரிவினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.