பிருந்தாவன்: உத்தர பிரதேசம் மதுரா தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு ஹேமமாலினிக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பிருந்தாவனத்தில் நேற்று தொண்டர்களுடன் உற்சாகமாக ஹோலி கொண்டாடிய ஹேமமாலினி கூறியது:
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெல்லும். பிரதமர் மோடி தலைமையின் கீழ் தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று உலகநாடுகள் இந்தியாவை வியந்துபாராட்டி வருகின்றன. இதனைஉணர்ந்து நாட்டை வல்லரசாக்கும் எங்களது முயற்சியில் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவே எனது விருப்பம்.
நல்ல பணிகளையும், முயற்சிகளையும் எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ஹேமமாலினி தெரிவித்தார். மதுரா தொகுதிக்கு இரண்டாம் கட்டமான ஏப்ரல் 26-ல் தேர்தல் நடத்தப்படவுள்ளது.