சம்பித் பத்ரா 
இந்தியா

மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்தில் மாநில கட்சிகளுக்கு பாஜக ஆதரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியில் பாஜகவும் ; மற்றொரு தொகுதியில் பாஜகவின் கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணியும் போட்டியிடுகிறது.

மேகாலயாவில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் பாஜக நேரடியாக போட்டியிடவில்லை. அதற்குப் பதிலாக தேசிய மக்கள் கட்சிக்கு பாஜக முழு ஆதரவு அளித்துள்ளது. நாகாலாந்தில் ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. அந்த தொகுதியில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி மணிப்பூர் மாநிலத்தில் புறநகர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் திமோத்திக்கு பாஜக ஆதரவு அளிக்கும்.

மேகாலயாவின் ஷில்லாங், துரா மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அம்பரீன் லிங்டாக், அகதாசங்மாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும். நாகாலாந்து மாநிலத்தில் உள்ள நாகாலாந்து மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி வேட்பாளர் சம்பன் முரிக்கு பாஜக ஆதரவு அளிக்கும். இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு 3 வடகிழக்கு மாநிலங்களிலும் மாநில கட்சிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT