கேஜ்ரிவால் சிறையிலிருந்து பிறப்பித்த உத்தரவை காண் பித்த டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி. படம்: பிடிஐ 
இந்தியா

டெல்லியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறையில் இருந்து முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு: நீர் வளத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரி வால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 6 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கைதான பிறகும் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்லி நீர் வளத் துறை அமைச்சர் அதிஷி டெல்லியில் நேற்று கூறியதாவது:

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்சிறையில் இருந்தாலும் தன்னைபற்றி கவலைப்படவில்லை. டெல்லி மக்கள் குறித்தும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் மட்டுமே கவலைப்படுகிறார்.

சிறையில் இருந்தபடியே அவர்தனது முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், ‘டெல்லியில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். துணைநிலை ஆளுநரின் ஆதரவை கோர வேண்டும்' என்று முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி பாஜக மூத்த தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்ஸா கூறியதாவது: அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் கேஜ்ரிவால் இருக்கிறார். அவர் எப்படி அரசாணையை பிறப்பிக்க முடியும். அவர் அதிகாரப் பூர்வமாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றால் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுடன் முதன்மை செயலாளர் வாயிலாகவே ஆணையை வெளியிட வேண்டும்.

அமைச்சர் அதிஷி நிருபர்களிடம் காண்பித்த ஆணையில்,அரசாணையின் எண் குறிப்பிடப் படவில்லை. இது போலியான ஆணை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு சிர்ஸா தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி திகார் சிறையின் முன்னாள் சட்ட நிபுணர் கூறும்போது, “ஒரு சிறைக் கைதி வாரத்தில் இருமுறை மட்டுமே வெளிநபர்களை சந்திக்க முடியும். எனவே முதல்வர் கேஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே ஆட்சி நடத்த முடியாது. அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டால் மட்டுமே ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க முடியும். வீட்டுச் சிறையை ஏற்படுத்த டெல்லி துணைநிலை ஆளுநரால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உத்தரவிட முடியும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT