உலகம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், இந்தியாவில் திருமணமான நகர பெண்கள் வேலைக்கு செல்வது மிகுவும் குறைவே என்று சமீபத்தில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey office – NSSO) நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், இந்திய தலைநகரமான டெல்லிதான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2011- 2012ஆம் ஆண்டுக்கான வேலைபார்ப்பு விவரத்தின்படி, இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த பொருளியலாளர்கள், என்.எஸ்.எஸ்.ஒ-வின் 20 ஆண்டு கால விவரப் பட்டியலை ஆராய்ந்தனர். இதில், நகர பெண்களில் திருமணமானவர்கள் வேலைக்கு செல்வதை தவிர்க்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பொருளியலாளர் ரத்னா சுதர்சனும், சமூக ஆய்வுகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சரண்யா பட்டாசார்யாவும் கண்டறிந்ததன்படி, “திருமணத்திற்குபின் பெண்கள் வேலைக்கு செல்வதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்கள்தான். மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்கள், குழந்தை பிறப்பிற்குபின் தங்களது பணியை ராஜினாமா செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரையில், கல்யாணம் என்பது பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்துவதில் முக்கிய காரணியாக உள்ளது.”, என்று தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆய்வு முடிவை பிரதிபலிக்கும் விதமாகவே உள்ளது டெல்லியின் வடக்கிழக்கு பகுதியில் வசிக்கும் ரேணு குடும்பத்தாரின் நிலை. 2010-ஆம் ஆண்டு முதல், அவரும், அவரது சகோதரியும் சீலம்பூரிலுள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். 2011-ஆம் ஆண்டு, அவரது சகோதரிக்கு திருமணமானதும், அவர் தனது பணியை ராஜினாமா செய்தார். இதுமட்டுமின்றி, அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததும், அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக, அம்மா வீட்டிற்கே அவர் திரும்பிவிட்டார். "கல்யாணம் ஆகும்வரை நான் வேலைக்கு போகலாம். அதன் பிறகு, நான் கணவரை நம்பியே இருக்க வேண்டும்” என சமுதாயத்தில் நிகழும் யதார்த்தத்தை விளக்குகிறார்.
இதே ஆய்வில், சர்வதேச தொழிலாளர் அமைப்பானது கிராமப்புறப்பகுதியில் நடத்தியபோது, திருமண பந்தத்தால் அவர்கள் வேலைக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு பொறுப்பு ஆகியவற்றின் காரணமாக, பெண்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வது, ஆசிரியர் பணிக்கு செல்வது, கலைப்பொருட்கள் தயாரிப்பது போன்ற துறைகளில் ஈடுபடுகின்றனர்.
தமிழில்:ஷோபனா