இந்தியா

தமிழகத்துக்கு ரூ.6,696 கோடி நிதி நிலுவை: மத்திய அரசு மீது அதிமுக எம்.பி., எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பல்வேறு நலத் திட்டங்களுக்கு வந்து சேர வேண்டிய நிதியான ரூ.6 ஆயிரத்து 696 கோடியை மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்துக்கு தராமல் நிலுவையில் வைத்துள்ளது என்று அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் மாநிலங்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

வேலைவாய்ப்பு உருவாக்கம், வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பட்ஜெட்டில் எதிர்பார்த்தோம். ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான எந்த முயற்சியும் இல்லை.

ஆட்சிக்கு வரும் போது, வருமானவரி விலக்கை ரூ.2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கூறி வந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.  இன்னும் 5 லட்சமாக வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தவில்லை.

ஆனால், நிரந்தரக் கழிவாக ரூ.40 ஆயிரம் அளித்துள்ளார்கள். மற்றொரு பக்கம், கல்விக்கான கூடுதல் வரியை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்திவிட்டனர்.

நிரந்தரக் கழிவுத் தொகையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டாலும், கல்விக்கான கூடுதல் வரியால் ரூ.11 ஆயிரம் கோடி கிடைக்கும். ஆதலால் ஒருபுறம் கொடுத்துவிட்டு, மற்றொருபுறம் மத்தியஅரசு எடுத்துக்கொண்டு விட்டது.

போக்குவரத்து படி ரூ.19,200, மருத்துவச் செலவு ரூ.15000 ஆயிரத்தை வருமானவரி விலக்கு 72-ம் பிரிவில் இருந்து நீக்கிவிட்டனர்.

பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி, கூடுதல் வரியாக ரூ.8 நீக்கிவிட்டு, அதைவேறு ஒரு வகையில் வரியாக புகுத்திவிட்டது மத்திய அரசு. அதேசமயம், கிராமங்களை இணைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தை வரவேற்கிறோம்.

14-வது நிதிக்குழு பரிந்துரையில் மத்திய அரசின் ஆதரவில் செயல்படும் திட்டங்களுக்கான நிதியை 75 சதவீதத்தில் இருந்து 60சதவீதமாகக் குறைத்துவிட்டனர்.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தவில்லை. சர்வ சிக் ஷான் அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் ஆகிய கல்வித்திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தேக்கம் அடைந்து கிடக்கின்றன. இதுபோன்ற முக்கியமான கல்வித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சியை இழந்துவிடுவோம்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் தங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. மத்திய அரசின் நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 696 கோடி நிலுவையில் இருக்கிறது.

உதாரணமாக, போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகையில், எஸ்.சி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.1,547 கோடி நிலுகையில் இருக்கிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சர்வசிக்ஷான் அபியான், ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்கு முறையே ரூ.1312 கோடியும், ரூ.1588 கோடியும் நிலுவையில் இருக்கிறது. ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி நிலுவகையில் தரப்பாடாமல் ஒரு ஆண்டாக இருக்கிறது.

தமிழகத்தில் 5 மீன்பிடித் துறைமுகம் ரூ.521 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ.298 கோடியாகும். அதில் இன்னும் ரூ.143 கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. ஆதலால் இதுபோன்ற திட்டங்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகை ஒதுக்க நிதி அமைச்சகம் முன்வர வேண்டும்.

சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. விரைவில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு செயல்படுத்தப்பட உள்ள ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடக்க இருக்கின்றன என்பதை அறிந்தேன்.

சென்னையில் மூன்று திட்டங்களும், சென்னை-பெங்கரூரு எக்ஸ்பிரஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான உதவியையும், நிலம் கையகப்படுத்துதலையும் தமிழக அரசு நிச்சயம் செய்யும், நன்கு ஒத்துழைப்பு அளிக்கும்.''

இவ்வாறு பாலசுப்பிரமணியன் பேசினார்.

SCROLL FOR NEXT