கேரளாவில் பிரதமர் மோடி 
இந்தியா

கேரளாவின் பாலக்காட்டில் பிரதமர் மோடி வாகன பேரணி: பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பாலக்காடு: மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவின் பாலக்காட்டில், பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் சென்று பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார்.

கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 3-வது இடத்தை பிடித்தாலும் 21 சதவீத வாக்குகளை பெற்றது. இந்நிலையில் கேரளாவின் பாலக்காடு தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ண குமார் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) மற்றும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வயநாடு உட்பட இன்னும் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பாலக்காட்டில் பிரதமர் மோடி நேற்று காலை வாகன பேரணி மேற்கொண்டார். கடந்த 5 நாட்களில் பிரதமர் மோடி 2-வது முறையாக கேரளா சென்றுள்ளார். பாலக்காட்டின் அச்சுவிளக்கு சந்திப்பில் பேரணி சென்ற பிரதமர் மோடியை கட்சி தொண்டர்கள் மலர்தூவி வரவேற்றனர். பாலக்காடு வேட்பாளர் கிருஷ்ண குமார், பொன்னானி பாஜக வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியன் மற்றும் மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். நேற்று காலை 11.15 மணிக்கு தனது வாகன பேரணியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சேலம் புறப்பட்டு சென்றார்.

SCROLL FOR NEXT