ஆச்சார்யா சத்யேந்திரதாஸ் 
இந்தியா

சக்தி குறித்த ராகுலின் சர்ச்சை கருத்து: ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் பதிலடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை மும்பையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இண்டியா கூட்டணி நடத்திய மும்பை பேரணியில் ராகுல் காந்தி சக்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படும் நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திரதாஸ் நேற்று கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைக்கு அதன் தலைவர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதே காரணம். இது ஒரு இந்து விரோத கட்சி. பாரதம் (இந்தியா) இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. இப்படி கருத்துகளை சொன்னால் அவர்களுடன் யார் நிற்கப் போகிறார்கள்?. நாரி சக்தி (பெண்கள் சக்தி) இந்து தர்மத்தின் பெருமை, சனாதன தர்மம். எங்கள் தெய்வங்களுக்கு எதிராக பேசும் இதுபோன்ற தலைவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். சக்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு ராகுல் காந்தியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு தலைமை அர்ச்சகர் சத்யேந்திரதாஸ் தெரிவித்தார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் நிறைவு விழா மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி ‘‘பிரதமர் மோடி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணமே வாக்குப்பதிவு இயந்திரம் தான்.

எங்களிடம் அந்த இயந்திரங்களை காண்பிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதை செய்யவில்லை. பிரதமர் மோடியின் சக்தி அதில்தான் உள்ளது. நாங்கள் தனியொருவரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை.

சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி என்பது வாக்கு பதிவு இயந்திரம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது’’ என்று பேசியிருந்தார். இந்த கருத்துதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

SCROLL FOR NEXT