ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
பிஹாரில் பத்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்த நிலையில், 66 வயது லாலுவுக்கு திங்கள்கிழமை காலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விமானம் மூலம் அவரை அவசரமாக மும்பைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து, அந்த மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “லாலு வுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. எனவே அவரது உடல்நிலை குறித்து பயப் படத் தேவையில்லை.
அவருக்கு அடுத்தகட்ட உடல் பரிசோதனை செய்வது குறித்து அவரது குடும்பத்தினர் முடிவு செய்வார்கள்” என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் 20-ல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து லாலு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.