இந்தியா

97 கோடி வாக்காளர்களுக்காக 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் 97 கோடி வாக்காளர்களுக்காக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை 400 தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 17 மக்களவைத் தேர்தல்களும் அடங்கும். 18-வது மக்களவைத் தேர்தலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக 1.82 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49.7 கோடி பேர் ஆண்கள். 47.1 கோடி பேர் பெண்கள். 48,000 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். முதியோர் வீடுகளிலேயே வாக்களிக்கலாம் மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். 55 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியலில் 85 வயதுக்கு மேற்பட் 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வயது முதுமையை கருத்தில் கொண்டு வீடுகளிலேயே அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோல 40 சதவீதம் அளவுக்கு உடல் உறுப்புகள் செயல்படாத மாற்றுத் திறனாளிகளும் அவரவர் வீடுகளிலேயே வாக்களிக்கலாம்.

ஆள்பலம், பணபலம், தவறான தகவல்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் புகார் அளித்த 100 நிமிடங்களில் தேர்தல் குழு சம்பவ இடத்துக்கு செல்லும். மக்களவைத் தேர்தலில் வன்முறை, கலவரத்துக்கு இடம் கிடையாது. வன்முறை தொடர்பான புகார்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2017 - 18 ம் ஆண்டு முதல் 2022 - 23-ம் ஆண்டு வரை 11 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தேர்தல்களில் ரூ.3,400 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடு முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

மதுபானம், பெட்ரோல், சேலைகள் இலவசமாக வழங்கப் படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான சமூக வலைதள பதிவுகள் கண்காணிக்கப்படும். தேசிய, பிராந்திய அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும். பொய் செய்திகள், தவறான தகவல்களை பரப்பக் கூடாது. இது தொடர்பான புகார்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்து ஊடகங்களில் செய்திகள் வெளியிடக் கூடாது.

உறுதி செய்யப்படாத தகவல்கள், தவறான தகவல்களை விளம்பரமாக வெளியிடக் கூடாது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தனி நபர் விமர்சனங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். நட்சத்திர பிரச்சாரகர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யக் கூடாது. குறிப்பாக மதம், சாதி பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஆணையம் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். சமூக ஊடகங்கள், மின்னணு, அச்சு ஊடக பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது தொடர்பாக இந்த கட்டுப்பாட்டு மையம் ஆய்வு செய்யும். மாநில மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் 2,100 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து மின்னணு, அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகின்றனர் என்ற விவரத்தையும் விளம்பரத்தில் தெரிவிக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலை, திருவிழாவாக கொண்டாட வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முன் வர வேண்டும். இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டிருப்பதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ரொக்க பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும். இதன் படி ரூ.50,000-க்கு அதிகமாக எடுத்துச் செல்லும் ரொக்க பணத்துக்கு உரிய ரசீதுகளை வைத்திருக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் சோதனையின்போது ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒரு நாளில் ரூ.10,000-க்கு மேல் ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யக் கூடாது.

பிரதமருக்கு விதிவிலக்கு கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம், பொதுக் கூட்டம், பேரணி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்தும், கண்காணிக்கும். மத்திய, மாநில அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. இதில் பிரதமருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது.

மத்திய, மாநில அரசுகள் புதிதாக அரசு திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தடையில்லை. அரசு செலவில் விளம்பரங்களை வெளியிடக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT