அரவிந்த் கேஜ்ரிவால் 
இந்தியா

போராட்டம் நடத்தும் அகதிகளை சிறையில் அடைக்க வேண்டும்: அர்விந்த் கேஜ்ரிவால் கோபம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிஏஏ சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்க கோரி, அவரது வீட்டு முன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அகதிகள் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம்கடந்த 11-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து கடந்த 2014-ம்ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், புத்தமதத்தினர், பார்சி இனத்தவர், கிறிஸ்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்திருந்தார். இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டால், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறுபவர்கள் அதிகரிப்பர், இவர்களுக்கு யார் வேலை வழங்குவது? இவர்களால் அசாம் போன்ற மாநிலங்களில் பிரச்சினை ஏற்படும் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இல்லம் முன்பு அண்டை நாடுகளில் இருந்து குடியேறிய அகதிகள் போராட்டம் நடத்தினர். இது குறித்து அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

முழு ஆதரவு: நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு, நம் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் வீடு முன்பு போராட்டம் நடத்தும் அளவுக்கு தைரியம்வந்துள்ளது. சிறையில் இருக்கவேண்டியவர்கள் எனது வீட்டு முன் வந்து போராடுகின்றனர். அவர்களுக்கு பாஜக முழு ஆதரவு அளித்துள்ளது.

சுயநலத்துக்காக அகதிகளை ஓட்டு வங்கியாக்க பாஜக சிஏஏ சட்டத்தை தேர்தலுக்கு முன்பு கொண்டுவந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும்பிரச்சினை ஏற்படும். சிஏஏ சட்டத்தால், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திருட்டு, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெடும். இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT