மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் திரிணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவர் அர்ஜூன் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இது, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: 2022-ல் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தபோது பாரக்பூர் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக நான் நிறுத்தப்படுவேன் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்சி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் துரோகம் இழைத்துள்ளது. அதன் காரணமாகவே அக்கட்சியிலிருந்து பாஜகவில் சேர உள்ளேன் என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த முறை பாரக்பூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அர்ஜூன் சிங்குக்கு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மாநில அமைச்சர் பார்த்தா பெளமிக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்துள்ள அர்ஜூன் சிங் தனது ஆதவரவாளர்களுடன் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரனீத் கவுர் எம்.பி. பாஜகவில் ஐக்கியம்: மக்களவை எம்.பி.யும், முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் நேற்று பாஜகவில் இணைந்தார்.
4 முறை எம்.பி.யாகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பிரனீத் கவுர் பாஜக தலைமையகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தவுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரும், அவரது மனைவி பிரனீத் கவுரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர் பாட்டியாலா மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக தொடர்ந்து நீடித்து வருகிறார்.