இந்தியா

குஜராத்தில் சர்தார் படேலுக்கு ராகுல் காந்தி மரியாதை

செய்திப்பிரிவு

காந்தி நகர்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்றிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று குஜராத்தின் பர்தோலி நகருக்கு சென்றார். அங்கு 1928-ம் ஆண்டில் சர்தார் வல்லபபாய் படேல் அமைத்த ஆசிரமத்துக்கு சென்றார். அந்த ஆசிரமத்தில் சர்தார் படேலுக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

பர்தோலியில் ராகுல் காந்தி வாகனத்தில் ஊர்வலமாக சென்றபோது இந்து அமைப்புகளின் தொண்டர்கள் ஊர்வலத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பதற்றமான சூழல் எழுந்தது. கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு இந்து அமைப்புகளின்தொண்டர்கள் அப்புறப்படுத்தப் பட்டனர்.

பர்தோலியில் இருந்து சோங்காத் பகுதிக்கு ராகுல் காந்தி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு சென்றார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக ராகுல் காந்தி டெல்லி திரும்பியதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் நந்துர்பார் பகுதியில் நாளை பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடர்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT