சுதா மூர்த்தி | கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்: பெண் சக்திக்கு சான்று என பிரதமர் பாராட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளார். இது பெண் சக்திக்கான சிறந்த சான்று என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது பதிவில், “இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சமூக சேவை, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் சுதா அவர்களின் பணி மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கக்கூடியது.

மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது பெண் சக்திக்கு சிறந்த சான்றாகும் மேலும் நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் திறமைக்கான எடுத்துக்காட்டாகும். அவரது நாடாளுமன்ற பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினைச் செய்த 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

சுதா மூர்த்தி இன்போசிஸின் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மனைவி; இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தியின் தாயுமாவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர். இவரது நாவல்கள், தொழில்நுட்ப புத்தகங்கள், மற்றும் பணக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தற்போது இந்தியாவில் இல்லாத சுதா மூர்த்தி தன்னை நியமனம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்த மகளிர் தினத்தில் எனக்கு இது மிகப்பெரிய பரிசு, நாட்டுக்கு பணியாற்றுவதற்கான புதிய பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் ஷிகானில் கடந்த 1950, ஆக.19ம் தேதி பிறந்த சுதா மூர்த்தி, கணிப்பொறி விஞ்ஞானி மற்றும் பொறியாளராக தனது பணியினைத் தொடங்கினார். டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் கம்பெனியின் (டெல்கோ) பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் இவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

சுதா மூர்த்தியின் தொண்டுகள் பரந்த அளவிலானது. வறுமை, சுகாதாரம் மற்றும் தூய்மை போன்றவைகளைக் கையாண்ட இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இவர் உள்ளார். இந்த அறக்கட்டளையின் மூலம் சுதா மூர்த்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.

பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்தியுள்ளார் மற்றும் பொதுக்கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதியளித்துள்ளார். ஹர்டுவர்ட் பல்கலையில், இந்தியாவின் மூர்த்தி கிளாசிக்கள் நூலகத்தை உருவாக்கியதால் இந்தியாவைத் தாண்டியும சுதாவின் ஆளுமை பரவியுள்ளது.

SCROLL FOR NEXT