ஒடிசாவில் கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பரில் பிஜு ஜனதா தளம் கட்சியை நவீன் பட்நாயக் தொடங்கினார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஒடிசாவின் முதல்வராக அவர் பதவி வகித்து வருகிறார். வரும் ஏப்ரலில் ஒடிசாவின் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளும் 21 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 9 இடங்கள் கிடைத்தன. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்துக்கு 12, பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன.
காங்கிரஸ் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழலில் வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பிஜு ஜனதா தளம் முடிவு செய்து உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதே நாளில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள முதல்வர் நவீன் பட்நாயக்கின் இல்லத்தில் பிஜு ஜனதா தளம், பாஜக மூத்த தலைவர்களிடையே கூட்டணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து பிஜு ஜனதா தள துணைத் தலைவர் டெபி பிரசாத் மிஸ்ரா கூறும்போது, “கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒடிசா மக்களின் நலன்களை முன்னிறுத்தி முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.
பாஜக, பிஜு ஜனதா தள கூட்டணி குறித்து ஒடிசா மாநில அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1998, 1999, 2004 மக்களவைத் தேர்தல்களின் போது பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கடந்த 2000, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளும் ஓரணியாக போட்டியிட்டன.
கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக கூடுதல் தொகுதிகளை கோரியதால் கூட்டணி உடைந்தது. இதன்பிறகு இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு வருகின்றனர். தற்போது பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. இதன்படி ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 110 தொகுதிகளிலும் பாஜக 35 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 14 தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இரு கட்சிகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வரும் 12-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒடிசாவுக்கு வருகிறார். அப்போது இரு கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும். இவ்வாறு ஒடிசா அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.