இந்தியா

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி அபிஜித் கனோபாத்யாய ராஜினாமா - பாஜகவில் இணைவதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கனோபாத்யாய தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி உள்ளார். மேலும், நாளை மறுநாள் பாஜகவில் இணையப் போவதாகவும் கூறி இருக்கிறார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மார்ச் 7ம் தேதி நான் பாஜகவில் இணைய இருக்கிறேன். தோராயமாக அன்றைய தினம் மதிய வாக்கில் நான் இணைவேன். நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பிவிட்டேன். அரசியல் சாசனத்தின் பிரிவு 217(1)(a)-ன்படி எனது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது.

ஒரு நீதிபதியாக எனது பணி முடிந்துவிட்டதாக எனது உள்ளுணர்வு கூறியது. வேறு ஒரு பெரிய பணியை, மக்கள் சேவையை செய்வதற்கான நேரம் இது என எனது உள்ளுணர்வு தெரிவித்தது. அதனடிப்படையில் இன்று நான் ராஜினாமா செய்தேன்.

பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடினமான உழைப்பாளி. நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டும் என முயல்கிறார். நான் ஏன் பாஜகவில் இணைய முடிவெடுத்தேன் என்றால், திரிணமூல் காங்கிரஸ் ஓர் ஊழல் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையலாம் என்றால், நான் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உடையவன்; ஆனால், அதில் அந்த கட்சிக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸில் இணையலாம் என்றால், அது ஒரு குடும்பத்துக்காக இயங்கும் ஜமின்தாரி கட்சி. எனவேதான் நான் பாஜகவை தேர்ந்தெடுத்தேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சார்ந்த வழக்குகளை நான் விசாரித்து வந்தேன். அதில் மிகப்பெரிய ஊழல் நடந்து தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்வித் துறையில் இருந்த முக்கியமான பலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலின்போது, மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதியில் அபிஜித் கனோபாத்யாய போட்டியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT