புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்ஐஏ ) சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத செயல்களுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் மண்ணடியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் சோதனை நடைபெறுகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடித்தது. இதில் உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை என்ஐஏ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கும் இன்றைய சோதனைகளுக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
சோதனையின் பின்னணி என்ன? முன்னதாக கடந்த ஜனவரி மாதம், கர்நாடகாவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உட்பட 8 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறையில் தீவிரவாதத்தைப் பரப்பியது, தற்கொலைத் தாக்குதல் சதியில் ஈடுபட திட்டமிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக தலைமறைவாக உள்ளவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், வெளிநாடு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஜுனைத் அகமது, சல்மான் கான். தவிர சையத் சுஹைல் கான், முகமது ஒமர், ஜாகித் தப்ரேஸ், சையத் முதாசீர் பாஷா, முகமது ஃபைசல் ரப்பானி ஆகியோர் தான் அந்த 8 பேர்.
முதன்முதலில் கடந்த ஜூலையில், பெங்களூரு மாநகரப் போலீஸார் 7 பிஸ்டல், 4 கையெறி குண்டுகள், ஒரு மேகசின், 45 லைவ் ரவுண்ட் தோட்டாக்கள், 4 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தது. 2023 அக்டோபரில் இவ்வழக்கில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது. டிசம்பர் 13, 2023-ல் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்தது. 2024 ஜனவரியில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) தமிழகம், கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.