திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், ரூ.207 கோடி மதிப்பிலான 121 கிலோ எடை கொண்ட ஆபரணங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் காணிக்கையாக வழங்கினார்.
சென்னையைச் சேர்ந்த எல்.எல்.பி. குழுமத்தின் தலைவரும், வெளிநாடு வாழ் இந்தியருமான தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின், அவரது மனைவி ராதிகா ஜெயின் தம்பதியினர் தங்களின் குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்தனர். ஏழுமலையானுக்கு காணிக்கை அளிப்பதற்காக கன்டெய்னர் லாரியில் இவர்கள் கொண்டு வந்த தங்க நகைகள் மிகவும் பாதுகாப்புடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதன் பின்னர் அந்த நகைகள் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது.பிறகு வர்த்தமான் ஜெயின் குடும்பத்தினருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். அதன் பின்னர் அனைவரும் நகைகளை ஊர்வலமாக கோயிலுக்குள் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் 121 கிலோ நகைகளும் ஒப்படைக்கப்பட்டன.
இதில் ஏழுமலையானுக்கு 106 கிலோ தங்க ஆபரணங்களும், பத்மாவதி தாயாருக்கு 15 கிலோ தங்கப் புடவையும் ஆபரணங்களும் காணிக்கையாக வழங்கப்பட்டன. 46 வகையான ஆபரணங்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் காணிக்கையாக வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் 8.5 அடி உயரம் உள்ள மூலவர் ஏழுமலையானுக்கு கிரீடம் முதல் திருப்பாதம் வரை தங்கம், வைரம், வைடூரிய ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. 120 கிலோ எடையில் இந்த ஆபரணங்கள் மூலம் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
இதுபோல் ஏழுமலையானுக்கு 3 ‘செட்’ ஆபரணங்கள் உள்ளன. தற்போது வர்த்தமான் ஜெயின் 4-வது ‘செட்’ நகைகளை வழங்கி உள்ளார். இது இன்று அபிஷேகத்துக்கு பின்னர் சுவாமிக்கு அணிவிக்கப்படும்.
விலை உயர்ந்த கற்கள் விவரம்:
தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் வழங்கிய 121 கிலோ தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.206.80 கோடியாகும். மொத்தம் 46 விதமான ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இதில் 238.2 கேரட் வைரம், நீலம், கனகபுஷ்பராகம் 91.6 கேரட், மாணிக்கம், மரகதம் 84.2 கேரட், 2,916.5 கிலோ சாளக்கிராம கற்களும் அடக்கம்.
தங்க ஆபரணங்கள் விவரம்:
ஒரு தங்க கிரீடம், சங்கு, சக்கரம், 2 திருப்பாதங்கள், அஷ்டோத்தர காசு மாலை, துளசி பத்ர மாலை, சதுர்புஜ லட்சுமி ஹாரம், புலிநக டாலர், ஒட்டியாணம், தங்க அரைஞான் கயிறு, சூரிய கண்டி, கவுஸ்துபம், ஸ்ரீவத்ஸம், 2 ஹஸ் தங்கள், நாகாபரண ஒட்டியாணம், கொலுசு, கங்கணங்கள்,
புஜ ஆபரணம், கர்ண பத்திரங்கள், 2 சாளக்கிராம ஹாரங்கள், கமல ஹாரம் உள்ளிட்ட 46 வகை ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம். ரவி சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி, திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர், போலீஸ் எஸ்பி சுப்புராயுடு உட்பட தேவஸ்தான உயர் மட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.