புதுடெல்லி: இந்தியாவில் 'தீவிர வறுமை'யில் இருக்கும் மக்களின் விகிதம் 3%க்கும் கீழாக குறைந்துவிட்டதாக ஆய்வுத் தரவுகள் கூறுகின்றன. இது, நாட்டின் ஆரோக்கிய சூழலைக் காட்டுகிறது.
வாங்கும் சக்தியின் அடிப்படையில் உலக மக்களின் வறுமை நிலை குறித்த தரவுகளை ‘வேர்ல்டு பாவர்ட்டி க்ளாக்’ (World Poverty Clock) வெளியிட்டு வருகிறது. உலக நாடுகளின் வறுமை நிலையை கண்காணிக்கும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் தீவிர வறுமைக் கோட்டுக்குக் கீழாக இருப்பவர்கள், அதாவது நாளொன்றுக்கு 1.9 அமெரிக்க டாலருக்கும் (ரூ.158) குறைவாக வருவாய் பெறுபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. தற்போது இவர்களின் எண்ணிக்கை 3.4 கோடிக்கும் குறைவாக உள்ளது. 2023-ல் இந்த எண்ணிக்கை 4 கோடியாகவும், 2022-ல் 4.6 கோடியாகவும் இருந்தது.
உலக நாடுகளின் வறுமை ஒழிப்பு குறித்த நிகழ்நேர கணகாணிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘வேர்ல்டு பாவர்ட்டி க்ளாக்’, நீடித்த நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா.வின் இலக்குகளின்படி, தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் தற்போது தீவிர வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களில் 94 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் இருப்பதாகவும், மீதமுள்ள 6 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு 2022-23ன்படி, இந்தியாவில் வறுமையின் அளவு வேகமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வறுமை 4.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் வறுமை 7.2 சதவீதமாகவும் உள்ளது. 2011-12ல் இருந்து உண்மையான தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 2.9 சதவீதம் வளர்ந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி 3.10 சதவீதமாகவும், நகர்ப்புற வளர்ச்சி 2.6 சதவீதமாகவும் உள்ளது. நகர்ப்புறத்தைவிட கிராமப்புறங்களில் தனிநபர் நுகர்வு அதிகமாக இருப்பதை புள்ளி விவரம் காட்டுகிறது.
இதேபோல், பிரமதர் நரேந்திர மோடி அரசின் வலுவான கொள்கைகள் காரணமாக இந்தியா, தீவிர வறுமையை ஏறக்குறைய ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனை அமைப்பான புரூகிங்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பல்வேறு தரவுகளின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பூட்டானுக்கான முன்னாள் செயல் இயக்குநர் சுர்ஜித் பல்லா, அமெரிக்காவின் அல்பேனி பல்கலைக்கழக பேராசிரியர் கரண் பாசின் ஆகியோர் இணைந்து தயாரித்த அறிக்கையை புரூகிங்ஸ் வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில், "இந்தியா, 2022-23 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நுகர்வு செலவினத் தரவை சமீபத்தில் வெளியிட்டது. இது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு அடிப்படையிலான வறுமை மதிப்பீடுகளை வழங்குகிறது. முந்தைய அதிகாரபூர்வகணக்கெடுப்பு 2011-12 முதல் நடத்தப்பட்டது.
2011-12ல் இருந்து உண்மையான தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 2.9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. கிராமப்புற வளர்ச்சி 3.1% ஆகவும், நகர்ப்புற வளர்ச்சி 2.6% ஆகவும் உள்ளது. சமத்துவமின்மை என்ற பொருளை எடுத்துக்கொண்டால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமத்துவமின்மை இரண்டிலும் முன் எப்போதுமில்லாத சரிவு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற சமத்துவமின்மை, 36.7ல் இருந்து 31.9 ஆக குறைந்துள்ளது. கிராமப்புற சமத்துவமின்றை 28.7ல் இருந்து 27.0 ஆக குறைந்துள்ளது.
அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையின் பெரிய சரிவு ஆகியவை, வாங்கும் திறனை அதிகரித்து, வறுமையை ஒழிக்க உதவுகிறது. உலக வங்கியின் மதிப்பீட்டைக் காட்டிலும், இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக தரவு காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. கடந்த காலத்தில் 30 ஆண்டுகளில் ஒழிக்கப்பட்ட வறுமை ஒழிப்பு குறியீடுகள், தற்போது 11 ஆண்டுகளில் காட்டுகின்றன.
கிராமப்புறங்களில் ஒப்பீட்டளவில் அதிக நுகர்வு வளர்ச்சி உள்ளது. கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள், மின்சாரம், சமையல் எரிவாயு, குழாய் வழி குடிநீர் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம், நுகர்வு வளர்ச்சியை உறுதிப்படுத்தி உள்ளது. உதாரணமாக, 15 ஆகஸ்ட் 2019 நிலவரப்படி இந்தியாவில் கிராமப்புறங்களில் குழாய் நீர் 16.8% ஆக இருந்தது. தற்போது அது 74.7% ஆக உள்ளது. பாதுகாப்பான நீரைப் பெறுவதால், நோய்த்தொற்று குறைந்து, இதன் காரணமாக குடும்பங்கள் அதிக வருமானம் ஈட்ட உதவியிருக்கின்றன.
இதேபோன்று, ஆர்வமுள்ள மாவட்டத் திட்டத்தின் கீழ், நாட்டின் 112 மாவட்டங்கள் குறைந்த வளர்ச்சிக் குறிகாட்டிகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டன. இந்த மாவட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு, வெளிப்படையான, கவனத்துடன் கூடிய, இலக்குகள் கொண்ட அரசாங்கக் கொள்கைகள் முக்கிய காரணமாக உள்ளன. சர்வதேச ஒப்பீடுகளின் பொது வரையறையின்படி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டது என்பதை தரவுகள் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துகின்றன. இது உலகளாவிய வறுமை ஒழிப்புக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊக்கமளிக்கும் வளர்ச்சியாகும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.