டெல்லி: தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பாஜக எம்.பி.,யும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், அரசியல் தொடர்பான பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். இவர், மார்ச் 2019-ல் பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன்பின் டெல்லியில் பாஜகவின் முக்கிய முகமாக மாறினார். தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் 6,95,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை எம்.பி.யானார்.
வரவிருக்கும் 2024 தேர்தலில் கம்பீருக்கு சீட் வழங்கப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. நேற்றுமுன்தினம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பாக மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இரவு முழுக்க ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையால் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் தான் அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் கம்பீர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில், “வரவிருக்கும் கிரிக்கெட் தொடர்களில் கவனம் செலுத்தும் வகையில், எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜே.பி. நட்டாவிடம் கேட்டுக் கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். ஜெய். ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.
கம்பீர் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்தப் பணியில் கவனம் செலுத்துவதற்காக தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சொல்லப்படுகிறது.