இந்தியா

“80 தொகுதிகளிலும் தோற்கடிப்பீர்; பாஜகவை அகற்றுவீர்” - உ.பி.யில் அகிலேஷ் முன்வைக்கும் முழக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடியுங்கள்; அக்கட்சியை அகற்றுங்கள் எனும் கோஷத்தை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் கிராமம் கிராமமாகச் சென்று சேர்ப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இண்டியா கூட்டணியை விரிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை நாங்கள் துடைத்தெறிவோம். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும், '80 ஹரோ, பிஜேபி ஹட்டாவோ' (80 தொகுதிகளிலும் தோற்கடிப்பீர்; பாஜகவை அகற்றுவீர்) எனும் கோஷத்தை கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் சேர்ப்பார்கள். பாஜக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சியாக உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி கட்சி ரேபரேலி, அமேதி, கான்பூர், சஹரன்பூர், ஃபதேபூர் சிக்ரி, வாரணாசி, பாராபங்கி, சீதாபூர், காசியாபாத், ஜான்சி, மகாராஜ்கஞ்ச், தியோரியா, அலகாபாத், புலந்த்ஷர், மதுரா, அம்ரோஹா, பன்ஸ்கோன் ஆகிய 17 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளில் வேறு சில சிறிய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலை எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டிருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் பாஜக 50 சதவீத வாக்குகளுடன் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 18 சதவீத வாக்குகளைப் பெற்ற சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 6.36 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார். 19.42 சதவீத வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1.21 சதவீத வாக்குகளைப் பெற்ற அப்னா தல்(சோனிலால்) கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT