ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றதால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேரின் அசையா சொத்துகளை அதிகாரிகள் முடக்கினர்.
இதுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது: இந்த சொத்துகள் ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற 6 குற்றவாளிகளுக்கு சொந்தமானது. அவர்கள் மீது கங்கன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 பேரும் தற்போது எல்லைக்கு அப்பால் உள்ளனர். கங்கன் தாலுகா, காசெர்வான், டாங்சட்டர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 82 (தலைமறைவான நபரை அறிவித்தல்), பிரிவு 83 (தலைமறைவு நபரின் சொத்துகளை முடக்குதல்) ஆகியவற்றின் கீழ் கந்தர்பால் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.