ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 3 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி ரூபாய்க்கும் மேல் கடன்பெற்றுவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் கான்பூரில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
பேங்க் ஆஃப் பரோடா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. விக்ரம் கோத்தாரி அவரது மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரூ.800 கோடி கடன்..
ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி ஐந்து பொதுத்துறை வங்கிகளிலிருந்து ரூ800 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இவருக்கு கடன் வழங்கி இருக்கின்றன. தங்களது விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து இவருக்கு கடன் வழங்கியதாகவும் தெரிகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து ரூ485 கோடியும், அலகாபாத் வங்கியிலிருந்து ரூ352 கோடியும் விக்ரம் கோத்தாரி கடனாகப் பெற்றுள்ளார்.
ஒரு வருடத்துக்குப் பிறகும் கடன் மற்றும் வட்டியைக்கூட கோத்தாரி கட்டவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கான்பூரிலுள்ள விக்ரம் கோத்தாரியின் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது.
அவர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், கான்பூரில் நேற்று நடைபெற்ற ஜாக்ரான் க்ரூப் உரிமையாலர் சஞ்சீவ் குப்தாவின் மகள் திருமண விழாவில் விக்ரம் கோத்தாரி கலந்து கொண்டார்.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலை ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வைர வியாபாரி நிரவ் மோடி வங்கி மோசடி செய்திகள் ஓய்வதற்குள் மற்றொரு வங்கி மோசடி செய்தி வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.