கோப்புப்படம் 
இந்தியா

மாநிலங்களவையில் பாஜக பலம் 117 ஆக அதிகரிப்பு: பெரும்பான்மைக்கு 4 இடங்கள் தேவை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் 20 வேட்பாளர்கள் உட்பட 41 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

உத்தரபிரதேசம் (10), கர்நாடகா (4), இமாச்சல பிரதேசத்தில் (1) உள்ள 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில் உ.பி.யில் 8, கர்நாடகாவில் 1, இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் என 10 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் 3, உ.பி.யில் சமாஜ்வாதி 2 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலின் மூலம் பாஜகவுக்கு கூடுதலாக 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 97 ஆகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) பலம் 117 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் இப்போதைக்கு மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை (121) பெற என்டிஏ கூட்டணிக்கு இன்னும் 4 இடங்கள் தேவைப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் காலி: எனினும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்னும் தேர்தல்நடைபெறாததால், அம்மாநிலத்தின் 4 மற்றும் 1 நியமன உறுப்பினர் என மாநிலங்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய நிலையில், மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 29 உறுப்பினர்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் (13), ஆம் ஆத்மி(10), திமுக (10) ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT