புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர்.
இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக வழங்கி வந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இவர்கள் ரூ.508 கோடி வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டிஉள்ளது.
மகாதேவ் செயலியின் நிறுவனர்களுக்கு நெருக்கமான நிதிஷ் திவானை அமலாக்கத் துறை கைதுசெய்தது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயலியின் நிறுவனர்களான சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பாலை துபாய் காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலி தொடர்பான பண மோசடி வழக்கின் கீழ், டெல்லி, மும்பை, மேற்கு வங்கம் உட்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.