இந்தியா

2010-ல் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் இறந்த வழக்கில் 23 பேர் குற்றவாளியாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

மேற்கு மித்னாபூர்: மேற்கு வங்க மாநிலத்தில் 24 வீரர்கள் இறந்த வழக்கில் 23 பேர் குற்றவாளிகள் என்று மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க மாநிலம் மேற்குமித்னாபூரில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் சில்சா முகாமில் இருந்தகிழக்கு பிராந்திய ஆயுதப் படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்டுகள் தாக்கியதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர். தேடப்பட்டு வந்த 5 மாவோயிஸ்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு மேற்கு மித்னாபூர்மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் மொத்தம் 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளி சிபிஐ (மாவோயிஸ்டு) தலைவர் சுதீப் சாங்தர் காலமானார். இந்நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதி சலீம் சாஹி, குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று தீர்ப்பளித்தார்.

முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த 10 பேர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் 23 பேருக்கும் விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT