மதன் திலாவர் 
இந்தியா

புகையிலை பயன்படுத்தும் ஆசிரியர்களை மக்கள் உதைப்பார்கள்: ராஜஸ்தான் கல்வி அமைச்சர் சர்ச்சை கருத்து

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: புகையிலை பயன்படுத்தும் ஆசிரியர்களை கிராம மக்களே உதைப்பார்கள் என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தானில் ஆறாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதன் திலாவர். இவர் 1990-ல் அயோத்தி ராமர் கோயிலுக்கான கரசேவையில் கலந்து கொண்டவர். ராஜஸ்தான் கேபினட் அமைச்சரான இவருக்குகல்வி அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மதன் திலாவர் 2 நாட்களுக்கு முன் பார்மரில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, “கடந்த 5 வருடங்களில் பாலியல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களை கணக்கு எடுக்க வேண்டும். இவர்களின் சட்டவிரோத சொத்துக்கள், புல்டோசர் ஏற்றி இடித்துத் தள்ளப்பட வேண்டும். பள்ளிக்கான வேலை நேரத்தில் ஆசிரியர்கள் கோயிலுக்கோ, மசூதிக்கோ செல்லக் கூடாது. மாநிலத்தின் மதரஸாக்களிலும் சோதனையிட வேண்டும். அதில், விதிகளை மீறும் மதரஸாக்களை உடனே இழுத்து மூடிவிடலாம்.

அதேபோல், எந்தவொரு ஆசிரியரும் குட்கா, பீடி, சிகரெட் பயன்படுத்தக் கூடாது. ஆசிரியர்கள் இவற்றை பயன்படுத்துவதை பார்த்தால் பொதுமக்களே பிடித்து உதைப்பார்கள். இந்த விவகாரத்தில் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் எவரும் புகையிலை விற்பனை செய்யக் கூடாது. மாநிலத்தின் அனைத்து பள்ளிகளின் பிரார்த்தனைகளில் சூரிய நமஸ்காரம் செய்யப்பட வேண்டும்” என்றார்.

அமைச்சர் திலாவரின் இந்த பேச்சால் ராஜஸ்தான் மாநில ஆசிரியர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். முஸ்லிம்களும் அமைச்சர் திலாவர் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் மீது முஸ்லிம்களின் பல்வேறு ஜமாத்துகள் கூடி ஆலோசனை செய்தன. அதில், சூரிய நமஸ்காரம் தங்களுக்கு ஏற்புடையது அல்ல எனவும், அல்லாவை தவிர வேறு எவரையும் முஸ்லிம்கள் வணங்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை அமைச்சர் திலாவர் கூறுவது இது முதல்முறையல்ல. இதற்குமுன் கடந்த வாரம் அவர், முகலாயப் பேரரசர் அக்பர் பற்றி கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர், “பள்ளிப் பாடங்களில் குறிப்பிடப்படுவது போல், அக்பர் ஒரு பேரரசர் அல்ல. அவரது இந்திய ஆட்சி ஒரு பாவம் ஆகும். அக்பர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர். இதற்காக இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பிடித்துச் செல்ல அவர் மீனா பஜார் எனும் சந்தையை அமைத்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

SCROLL FOR NEXT