முகலாய மன்னர் அவுரங்கசீப் ஒரு 'தீவிரவாதி' என பாஜக எம்.பி. மகேஷ் கிரி தெரிவித்துள்ளார். அதே வேளையில் அவுரங்கசீபின் சகோதரர் தாரா ஷிகோவை அமைதித்தூதுவர் என்றும் கற்றறிந்தவர் என்றும் பாராட்டியுள்ளார்.
டெல்லியில், அவுரங்கசீப் - தாரா ஷிகோ: இரு சகோதரர்களின் கதை என்ற கருத்தரங்கையும் மற்றும் தாரா ஷிகோ மறக்கப்பட்ட முஸ்லிம் இளவரசர் என்ற பெயரில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியையும் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி. மகேஷ் கிரி, செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அவுரங்கசீப் நிச்சயமாக ஒரு 'தீவிரவாதி'. அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய தண்டனையை அவர் பெறவில்லை. குறைந்தபட்சம் அவரது பெயரில் அமைந்த சாலைக்கு வேறு பெயராவது என்னால் சூட்ட முடிந்தது.
ஒவ்வொரு முறை அவுரங்கசீப் சாலையைக் கடக்கும்போதும் நான் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியிருக்கிறேன். ஒரு கொடுங்கோல் மன்னரின் பெயரை இந்திய சாலைக்கு சூட்டியுள்ளது இந்தியாவின் விருப்பத்திற்கு எதிரானது என்றே நான் கருதினேன். அதன் காரணமாகவே அந்த சாலையிம் பெயரை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என மாற்ற முயற்சித்து வெற்றி கண்டேன்.
நான் மேற்கொண்ட அந்த முயற்சிக்காக எனக்கு நிறைய மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருந்தாலும் நான் விடாமல் முயன்று சாலையின் பெயரை மாற்றினேன்.
பள்ளிக்களில் மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கும்போது அவுரங்கசீப் மட்டுமல்லாது அவரது சகோதரர் தாரா ஷிகோ பற்றியும் கற்பிக்க வேண்டும். அதுதான் மாணவர்கள் மத்தியில் வரலாற்றின் மீது ஒரு சமமான பார்வையை ஏற்படுத்தும். அவுரங்கசீப், மக்களை வதைத்தார் ஆனால் தாரா ஷிகோ இஸ்லாம் கற்பித்த கோட்பாடுகளுக்கு இணங்க வாழ்ந்தார். அவர் பல்வேறு மதத்தினருடனும் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனவே அவுரங்கசீப் பற்றி மட்டுமே கற்றுக்கொடுத்தால் அது வரலாற்றை பிழையுடன் கற்பித்தல் ஆகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.