அப்துல் மல்லீக் 
இந்தியா

ஹல்துவானி கலவரத்தின் முக்கிய குற்றவாளி அப்துல் கைது: முன்ஜாமீன் மனு அளித்திருந்தவர் டெல்லியில் சிக்கினார்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியின் வன்புல்புராவின் நசூல்நில ஆக்கிரமிப்பு பிப்ரவரி 8-ல்அகற்றப்பட்டது. இதில் மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து அன்று கலவரம் மூண்டது.

இதில் 6 பேர் உயிரிழந்ததுடன் 200 போலீஸார் உள்ளிட்ட 300 பேர்காயம் அடைந்தனர். மேலும், மதரஸா, மசூதியை நிர்வாகித்து வந்த அப்துல் மல்லீக் (முக்கியகுற்றவாளி) உள்ளிட்ட அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது வழக்குகள் பதிவாகின. இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக ஹல்துவானி நகராட்சி துணை ஆணையர் கணேஷ் பட், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதில், அப்துல் மல்லீக், மனைவி சபியா, மகன்மோயீத் உள்ளிட்ட 6 பேர் மீது தனியாக மோசடி மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவாகின. இவர்களது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்துல் மல்லீக் குறித்து தகவல் அளித்தால் பரிசு என்று போலீஸார் சுவரொட்டிகள் ஒட்டினர். இந்நிலையில் அப்துல் மல்லீக் நேற்று மாலை டெல்லியில் கைதாகி உள்ளார்.

இதுகுறித்து மல்லீக்கின் வழக்கறிஞர்கள் அஜய் பகுகுணா, ஷலாப் பாண்டே, தேவேஷ் பாண்டே கூறுகையில், ‘‘அப்துல்மல்லீக், கலவரத்தன்று டேராடூனிலும், ஒருநாள் முன்பு ஹரியாணாவின் பரீதாபாத்திலும் சொந்த வேலையாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த குற்றமும் செய்யாதவருக்காக ஹல்துவானி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவில், விலாசத்தை கண்டுபிடித்த போலீஸார் டெல்லியில் நேற்று மல்லீக்கை கைது செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

இதனிடையே, கலவரத்தில் உயிரிழந்த 6 பேரில் ஒருவராக பிரகாஷ் என்ற பெயரும் இடம்பெற்று இருந்தது. பிறகு இவர் கலவரத்தால் உயிரிழக்கவில்லை என்றும், தனிப்பட்ட விரோதத்தில் கொல்லப்பட்டார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு ஜமாத்உலமா-எ-ஹிந்த் சார்பில் தலாரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மசூதி, மதரஸாவின் இடிப்புக்கு தடை கோரி உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 14 -ல் வருவதற்கு முன்பாகவே இடிக்கப்பட்டதால், கலவரம் மூண்டதாக முஸ்லிம் அமைப்புகள் புகார்எழுப்பியிருந்தன. இந்த வழக்கு 3வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT