அமிர்தசரஸ்: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் காங்கிரஸில் முக்கிய பேச்சாளராக உள்ளவர் சித்து. ஆனால், மாநில காங்கிரஸ் தலைமையின் மீதான அதிருப்தியால் கட்டுபாடுகளை மீறி பேரணிகளைநடத்தி வருவது அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் வதேராவுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் சித்து தனது தாய் கட்சிக்கு (பாஜக) திரும்பி, வரும் மக்களவை தேர்தலில் அக்கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி சோம்தேவ் சர்மா கூறுகையில், “ சித்து கட்சியில் சேருவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. அதுகுறித்த விவாதங்களும் கட்சியில் நடைபெற்று வருகின்றன. ஆனால், அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் மக்களவை தொகுதி பாஜகவின் கோட்டை. அங்கு சித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.
இருப்பினும் இந்த யூகத்தை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ராமன் பக்சி நிராகரித்துள்ளார். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது அந்த தலைவரின் மீதானநம்பகத்தன்மையை மக்கள் இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்: குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் தற்போதுள்ள சன்னி தியோலுக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது.