கோப்புப்படம் 
இந்தியா

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது.

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் நீண்ட காலமாக போராடி வந்தனர். கடந்த அக்டோபரில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த சமூகத்தை சேர்ந்த மனோஜ் ஜராங்கே பாட்டீல், இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 25-ம் தேதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து, வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

இதையடுத்து பிற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்துக்கு உட்பட்டு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

இதையடுத்து மராத்தா சமூகத்தின் நிலை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சுக்ரி தலைமையிலான குழு ஆய்வு செய்து, அரசிடம் கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்தது.

இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மகாராஷ்டிரசட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது.

மனோஜ் ஜராங்கே மீண்டும்உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் இந்த மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

எனினும் இச்சட்டம் குறித்து மனோஜ் ஜராங்கே அதிருப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த சட்டம் எங்கள் கோரிக்கைகளுடன் ஒத்துப் போகவில்லை. எங்கள் தேவைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும். குன்பி அடையாளத்தை நிரூபிக்க கூடியவர்களுக்கு ஓபிசி பிரிவின் கீழும் மற்றவர்களுக்கு தனிச் சட்டத்தின் மூலமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக புதன்கிழமை ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் மராத்தாஇடஒதுக்கீடு மசோதா மகாராஷ்டிரசட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது இது மூன்றாவது முறையாகும். மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கடந்த 2018 நவம்பரில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசும் இயற்றியது. என்றாலும் 2021-ல் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பு மீறப்பட்டதை நியாயப்படுத்த விதிவிலக்கான சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மற்றும் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சமாஜ்வாதி கோரிக்கை: இதற்கிடையில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி நேற்று கோரிக்கை விடுத்தது. சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப்பேரவைக்கு வெளியில் பதாகை ஏந்தி நின்றார்.

SCROLL FOR NEXT