கோப்புப்படம் 
இந்தியா

சண்டிகர் மேயர் தேர்தல் பாஜக வெற்றி ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மன்ற தேர்தல் ஜன.30-ல் நடந்தது. ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெற்ற இந்த தேர்தலில் 35 பேர் வாக்களித்தனர். மனோஜுக்கு ஆதரவாக ஒரு எம்.பி., 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். குல்தீப் குமாருக்கு ஆதரவாக அந்த கட்சியின் 13, காங்கிரஸின் 7 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி அனில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவான 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து 16 வாக்குகளை பெற்ற மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு வழக்கை விசாரித்தது.

வாக்குச்சீட்டுகளை எண்ணும்போது தேர்தல் அதிகாரி அனில், சிசிடிவி கேமராவை பார்ப்பதும் வாக்குச்சீட்டில் ஏதோ கிறுக்குவதுமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ ஆதாரம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டுகளையும் தலைமை நீதிபதி ஆய்வு செய்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குச்சீட்டிலும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 8 வாக்குச்சீட்டுகளிலும் தேர்தல் அதிகாரி அனில் வேண்டுமென்றே பேனாவால் கிறுக்கி அந்த வாக்குச்சீட்டுகளை செல்லாது என்று அறிவித்துள்ளார். அவர் தனது குற்றத்தை மறைத்து நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளார். இதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 340-வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறோம். சண்டிகர் மேயர் தேர்தலில் 20 வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாரை வெற்றி பெற்றவராக அறிவிக்கிறோம். பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கரின் வெற்றியை ரத்து செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆம் ஆத்மியின் 3 கவுன்சிலர்கள் தற்போது பாஜகவுக்கு மாறியுள்ளனர். அகாலி தளத்தை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் பலம் 19 ஆக உயர்ந்துள்ளது.

ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் அணி மாறியதால் அந்த கூட்டணியின் பலம் 17 ஆக குறைந்துள்ளது. மறுதேர்தல் நடந்தால் பாஜக வேட்பாளர் வெல்வார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக குல்தீப் குமார் சண்டிகர் மேயராகி உள்ளார்.

SCROLL FOR NEXT