இந்தியா

“ஒவ்வொரு திட்டத்தின் பின்னாலும் சதி” - ஜெகன் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

என். மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால், இங்கு அரசியல் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று பாபட்லா மாவட்டம், பர்சூரி தொகுதியில் இங்கொல்லு எனும் ஊரில் ‘ரா... கதலி ரா’ எனும் பெயரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: அரசியலை கலப்படம் செய்தவர் ஜெகன். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இறுதி நாட்கள் இவை. விரைவில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி ஆட்சி அமையும். தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆட்கள் இல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டி அவதி படுகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலா தொகுதியில் கூட தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும். ஆதலால் ‘ஒய் நாட் புலிவேந்துலா’ எனும் கேள்வியை மக்கள் முன் வைக்கிறேன். அரசியல் நடத்தலாம் சில்லறை தனமான அரசியல் செய்ய கூடாது. ஒரு கவுரவமான அரசியல் செய்து எதிரியிடம் போட்டி போட வேண்டும்.

தெலுங்கு தேசம் தேர்தல் பிரச்சாரத்தை போலீஸாரின் உதவியோடு தடுத்து நிறுத்த ஆளும் கட்சியினர் முயன்றனர். அது நடக்க வில்லை. நீதிமன்ற உத்தரவோடு நான் பிரச்சாரம் செய்து வருகிறேன். சிறிது நாட்களில் மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் கட்சியோடு போலீஸார் கை கோர்த்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஆந்திராவில் குப்பைக்கு கூட வரி கட்ட வேண்டியுள்ளது. ஜெகன் போடும் ஒவ்வொரு திட்டத்தின் பின்னாலும் ஒரு சதி திட்டம் இருக்கும். அமராவதியே ஆந்திராவின் தலைநகரம் என சட்டப் பேரவையில் ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என கூறினர்.

இப்போது, ஹைதராபாத்தை ஆந்திரா, தெலங்கானாவின் ஒருங்கிணைந்த தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென கூறுகின்றனர். அன்று பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டது அமராவதிக்காகத்தான்.

சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தினால்தான். ஆனால், அதே சிறப்பு அந்தஸ்து கொண்டு வருவேன் என கூறி ஆட்சியில் அமர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி இதுவரை அது குறித்து வாய் திறக்காதது ஏன் ? மத்திய அரசு உதவி செய்கிறோம் என கூறினாலும் அதனை பெற முடியாத நிலையில் ஜெகன் அரசு உள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

SCROLL FOR NEXT