இந்தியா வந்துள்ள கனாட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி மற்றும் அந்நாட்டு அமைச்சர் அமர்ஜித் சோகி ஆகியோர் காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்து கொண்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்வால் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன.
மும்பையில் பிப்ரவரி 20ம் தேதி நடந்த சினிமா துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரிகோரும் சென்றிருந்தனர் அப்போது, அங்கு வந்திருந்த பிரிவினைவாதி ஜஸ்பாலுடன், சோபி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் டெல்லியில் இன்று கனடா பிரதமர் ட்ரூடோ சார்பில் நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த அழைப்பை, கனடா தூதரகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இந்நிலையில் ஜஸ்பால் அத்வால் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜஸ்பால் அத்வால்
ஜஸ்பால் அத்வால் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர். கனடாவில் ஆன்லைன் ரேடியோ நடத்தி வரும் அவர், பஞ்சாப் மாநிலத்தை 80களில் காலிஸ்தான் அமைப்பில் முக்கிய உறுப்பினர். பஞ்சாபை தனி நாடாக பிரிக்க வேண்டும் என போராடிய காலிஸ்தான் அமைப்பின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பில் தீவிர உறுப்பினராக பணியாற்றியவர்.
பிற்காலத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறைந்து விட்டபோதிலும், அந்த அமைப்பிற்கு இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தடை உள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் மல்கித் சிங் சித்து, கனடாவின் வான்கூவர் நகரில் நடந்த தனது உறவினர் திருமணத்திற்கு சென்றார். அப்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மல்கித் சிங் உயிர் பிழைத்தபோதிலும், ஐந்தாண்டுக்கு பின் பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டார்.
வான்கூவரில் மல்கித் சிங் மீது 1986ம் ஆண்டு நடந்த தாக்குதல் தொடர்பாக அத்வால் உள்ளிட்டோர் கனடாவில் கைது செய்யப்பட்டனர். கனடா கீழ் நீதிமன்றம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. எனினும் மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தார்.
இதை தவிர உஜ்ஜால் தோசஜ் மீது தாக்குதல் நடத்திய வழக்கிலும் அத்வால் மீது புகார் கூறப்பட்டது. கனடா பல வழக்குகளில் சிக்கிய அத்வால், அந்நாட்டு பிரதமர் ட்ரூடோவுடான வந்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் கனாட பிரதமர் அலுவலகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்வாலை யாரும் அழைத்து வரவில்லை. சொந்த விருப்பத்தின் பேரில் அவர் தனியாகவே இந்தியா வந்துள்ளதாக கனடா பிரதமர் அலுவலம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் இதுபற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளிக்கவில்லை. பஞ்சாப் அமைச்சர் மீதான தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அத்வாலுக்கு வெளியுறவு அமைச்சகம் எப்படி விசா வழங்கியது என்ற கேள்விக்கும் பதில் இல்லை.