புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை வரும் ஜூலை 16-ம் தேதி தொடங்குகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவிற்காக, தரை, கடல், ஆகாயம் ஆகிய மூன்று மார்க்கங்களிலும் கண்காணிக்கும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தை ஒடிசா காவல் துறை வகுத்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தரைவழியாகக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வான்வழியாகக் கண்காணிக்க அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு கருவிகளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடல்வழிப் பாதுகாப்பிற்காக இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் ஒடிசா கடல்சார் போலீஸார் இணைந்து கப்பல்கள் மூலம் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மாநில டிஜிபி ஒய்.பி. குரானியா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், என்.எஸ்.ஜி மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) ஆகிய மத்திய படைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 9 நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரை திருவிழாவுக்கு, எவ்விதப் பாதுகாப்பு குறைபாடும் இன்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த மொத்தம் 12,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.