இந்தியா

‘இஸ்ரோ’வில் இருந்து விஞ்ஞானிகள் கொத்துக் கொத்தாக விலகுவது ஏன்? - காரணங்களும் சவால்களும்

பாரதி ஆனந்த்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அமைப்பை டாக்டர் விக்ரம் சாராபாய், 1969-ம் ஆண்டில் தொடங்கினார். இந்த 53 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இஸ்ரோ, சமீப நாட்களாக ஊடகங்களில் பரபரப்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது. ஆனால், எப்போதும்போல புதிய செயற்கைக்கோள் லாஞ்ச்சுக்காக அல்லாது வேறொரு விஷயத்துக்காக இஸ்ரோ பரபரப்பு செய்தியாகியுள்ளது.

ஓராண்டில் 120 ராஜினாமாக்கள்...

கடந்த ஓராண்டில் இஸ்ரோவில் இருந்து 120 விஞ்ஞானிகள் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை இஸ்ரோ அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால், ராஜினாமா பட்டியலில் 10 முக்கியத் தலைகள் உள்ளது உறுதியாகியுள்ளது.

இந்தப் பணி விலகல் பின்னணியில் குறைவான சம்பளம், இந்திய விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்-களின் ஆதிக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த திட்​டங்​கள் பாதிக்கப்படும் என்பதால் இஸ்ரோவும் இந்த விவகாரத்தின் மீது உடனடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இஸ்ரோ ராஜினாமாக்கள், அதன் பின்னணி, தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர்களின் கருத்து, பரிந்துரைகள் குறித்தும் பார்ப்போம்.

‘தன் வினை தன்னைச் சுட்டதா?!’

‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பதுபோல் மத்திய அரசு இந்திய விண்வெளித் துறையை தனியார்களுக்கு திறந்துவிட்டது தற்போது இஸ்ரோவை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் தான் பரவலாக நிலவுகிறது.

மத்திய அரசின் ஊக்குவிப்பால், இந்தியாவில் புதிதாக 400 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவை விஞ்ஞானிகளுக்கு அதிகப்படியான ஊதியமும், அவர்களின் திறமைக்கு பல்வேறு வாய்ப்புகளையும் அள்ளித்தர தயாராக இருக்கின்றன. இதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமாவுக்கு முதல் காரணமாகக் கூறப்படுகிறது.

2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை தனியார் பங்கேற்புக்கு திறக்கப்பட்டதில் இருந்து, Skyroot Aerospace, Agnikul Cosmos, Pixxel, Bellatrix Aerospace, Dhruva Space, Digantara மற்றும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளி துறையின் தன்மையையே மாற்றியமைத்துள்ளன. அதன் திட்டங்களும், அதில் காட்டப்படும் வேகமும் தீவிரமும் பணிபுரியும் சூழலை ஈர்க்கும் வண்ணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிரவைக்கும் ராஜினாமாக்கள் குறித்து இஸ்ரோவில் இருந்து விலகிய விஞ்ஞானிகள் வட்டத்தில், “2023-ம் ஆண்டு இந்திய விண்வெளிக் கொள்கை தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்களை தொடங்க ஊக்குவித்தது. அதன்படி உருவான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு ஆக்கபூர்வ பதவிகளை உருவாக்கியது. அதுவும் அதற்கான சம்பளம் மிகவும் சிறப்பாக இருந்தது. புதிய படைப்புகளை ஊக்குவிக்கும் பதவிகளும், சம்பளமும் இளம் விஞ்ஞானிகளை வெகுவாக ஈர்க்கிறது” என்று பேசிக்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல்கள், விண்வெளித் துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்டதே ராஜினாமாக்களுக்கு முதல் காரணம் என்று மெய்ப்பிப்பதைப் போல் உள்ளது.

திட்டங்களின் தாமதமும் காரணமா?

தனியார் பங்கேற்பு மட்டுமே முழுக்க முழுக்க காரணம் என்று சொல்லிவிட முடியாது. இஸ்ரோ அறிவித்த Gaganyaan G1, SSLV-L1, GSLV-F17, PSLV-N1 உள்ளிட்ட பல உயர்மட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி தள்ளிப்போயுள்ளன. இப்படியான தாமதங்களும் கூட ராஜினாமாக்கள் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விலகல் புள்ளிவிவரம்:

இஸ்ரோவில் இருந்து வெளியேறியோர் புள்ளிவிவரம் வருமாறு:

2012 முதல் 2017 வரை இஸ்ரோவின் கீழுள்ள 25 மையங்களில் இருந்து 289 விஞ்ஞானிகள் வேலையை விட்டுச் சென்றதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.

2018 முதல் 2022 வரை அனைத்து இஸ்ரோ மையங்களிலும் சேர்த்து 381 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்தனர். 2023 - 2024 நடுப்பகுதி வரை 38 விஞ்ஞானிகள் வெளியேறினர்.

கடைசியாக கடந்த 12 மாதங்களில் மட்டும் மூத்த விஞ்ஞானிகள் உட்பட சுமார் 120 பணியாளர்கள் இஸ்ரோவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதில், பெங்​களூரு யூ.ஆர்.ராவ் செயற்​கைக்​கோள் மையம், திருவனந்தபுரம் விக்​ரம் சாரா ​பாய் விண்​வெளி மையம் ஆகியனவற்றில்தான் விஞ்ஞானிகள் வெளியேற்றம் மிக அதிகமாக இருந்துள்ளது என்கிறது என்றும் அந்த புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது.

ஜூலை 14 உத்தரவு:

இந்தப் பின்னணில்தான், இந்​தி​யா​வின் மிக முக்​கிய விண்வெளித் திட்டமான ‘ககன்​யான்’ (மனிதனை விண்வெளிக்கு அனுப்​பும் திட்​டம்) மற்​றும் இதர முக்கியத் திட்​டங்​களில் பணி​யாற்​றும் ‘குரூப் ஏ’ பிரிவு விஞ்ஞானிகள் மற்​றும் தொழில்​நுட்ப வல்லுநர்​களின் ராஜினாமா அல்​லது விருப்ப ஓய்வு கடிதங்​களை இனி வழக்கமான நடை​முறையாக ஏற்று ஒப்​புதல் அளிக்​கக் கூடாது என்று இஸ்ரோ​வின் முக்​கிய மையங்​களுக்கு மத்​திய விண்வெளித் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்​ளது.

ஜூலை 14 அன்று அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில், ‘கடந்த 2020-ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்ட விதி​யின்​படி, இஸ்ரோவின் அந்​தந்த விண்​வெளி மைய இயக்​குநர்​களே விஞ்ஞானிகளின் ராஜி​னாமா மற்​றும் விருப்ப ஓய்வு கடிதங்​களை ஏற்று ஒப்​புதல் அளிக்க அதி​காரம் வழங்கப்பட்​டிருந்​தது.

ஆனால், தற்​போது ஏற்​பட்​டுள்ள விஞ்​ஞானிகளின் தொடர் வில​கல் காரணமாக தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த திட்டங்​கள் பாதிக்கப்படு​வதைத் தவிர்க்​கும் வகை​யில், இந்த அதி​காரம் மீண்டும் மத்​திய விண்​வெளித் துறை​யின் (DoS) நேரடி கட்டுப்பாட்டுக்கே கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரு யூ.ஆர்.ராவ் செயற்​கைக்​கோள் மையம், திருவனந்தபுரம் விக்​ரம் சாரா ​பாய் விண்​வெளி மையம் உள்ளிட்ட அனைத்து இஸ்ரோ மையங்​களுக்​கும் இந்த புதிய உத்​தரவு பிறப்பிக்கப்பட்டுள்​ளது.

இனி விஞ்​ஞானிகளின் ராஜி​னாமா கடிதங்களை இறுதி ஒப்புதலுக்​காக, அந்​தந்த மைய இயக்குநர்களின் தெளிவான பரிந்துரைகளு​டன் விண்வெளித் துறைக்​கு அனுப்​ப வேண்டியது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விண்வெளித் துறை அதிகாரிகள் வட்டாரம் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், ‘ராஜினாமாக்களுக்கு கெடுபிடிகளை ஏற்படுத்தும் இந்த உத்தரவை, இஸ்ரோ விஞ்ஞானிகள் இனி ராஜினாமாவே செய்ய முடியாதபடி முழுமையான தடையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாறாக, சதீஷ் தவான் விண்வெளி மையம், VSSC, URSC, ISRO டெலிமெட்ரி மற்றும் தேசிய தொலை நுண்ணுணர்வு மையம் - NRSC உள்ளிட்ட சில முக்கிய மையங்களுக்கு மட்டும் கெடுபிடியை காட்டுவதாக பாவிக்க வேண்டும்.

இஸ்ரோவிலிருந்து யாரையும் வெளியேறவிடாமல் தடுக்க முடியாது. ஆனால், முக்கியமான திட்டங்களை வழிநடத்தும் முக்கிய விஞ்ஞானிகளின் ராஜினாமா கோரிக்கைகளை அமைச்சகம் ஆய்வு செய்யும் என்பதே இதன் சாராம்சம்’ என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ‘விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு மாறுவதற்கு அரசு நிறுவனங்களின் பாரம்பரியமான, கடுமையான படிநிலை அமைப்பில் இருந்து விடுதலை பெறும் வேட்கையும், தனியார் நிறுவனங்களில் நிலவும் வேகமான முடிவெடுக்கும் செயல்முறை, சிறந்த தொழில்முறை அங்கீகாரம் கிடைக்கும் சூழலும் உள்ளது’ என ஆராய்ச்சிப் பணியாளர்கள் மனநிலை குறித்து ஆராயும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்னதான் தீர்வு?

இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடுகளில் சென்று வேலை செய்பவர்கள் நாட்டில் ‘ப்ரெயின் ட்ரெயின்’-ஐ ஊக்குவிக்கிறார்கள் என்ற விமர்சனம் எப்போதுமே இங்கே இருக்கிறது. இத்தகைய ‘அறிவுஜீவிகளின் வெளியேற்றம்’ இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவில் இங்கேயே உருவான தனியார் அமைப்புகளால் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் இஸ்ரோ அமைப்பானது அமெரிக்காவின் NASA மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency) போன்ற மேற்கத்திய விண்வெளி நிறுவனங்களின் வேலைவாய்பு மாதிரிகளை ஆராய்ந்து, அதை இஸ்ரோவில் செயல்படுத்த வேண்டும் என்று சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப் பெரிய கனவு இஸ்ரோவில் பணியாற்றுவதுதான். அந்த பெருமிதத்தையும், அப்படி உள்ளே வருபவர்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இஸ்ரோ இப்போது இருக்கிறது.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையில், ப்ராஜக்ட் அடிப்படையிலான பணியமர்த்தல்கள் என்று அவ்வப்போது திட்டத்துக்கு ஏற்ப விஞ்ஞானிகளை பணியமர்த்தினாலும் கூட, நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலரை நல்ல ஊதியத்துடன் நிரந்தரமாக தக்கவைக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, நாசாவின் பணியாளர் அமைப்பு நிரந்தர அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் திட்டம் சார்ந்த பணியாளர்களை உள்ளடக்கியதாக உள்ளது.

இத்தகைய ஹைப்ரிட் மாடல் நிறுவனத்திற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு, நிறுவன ரீதியான நிபுணத்துவத்தையும் தக்கவைக்க உதவுகிறது.

விண்வெளிக் கொள்கை வல்லுநர்கள் பரிந்துரைக்கும் இந்த கலப்பு (ஹைப்ரிட்) மாதிரியை விரிவுபடுத்துவதன் மூலம் இஸ்ரோ பிரெயின் ட்ரெயினில் இருந்து தப்பிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT