பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ கோபாலய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகி பத்மராஜை பெங்களூரு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட் தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கோபாலய்யா நேற்று முன் தினம் (பிப்.13) பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் அலுவலத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ''மகாலட்சுமி லே அவுட் காங்கிரஸ் நிர்வாகி பத்மராஜ் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துவருகிறார். அவர் கேட்ட பணத்தை தராவிட்டல், என்னை கடத்தி கொலை செய்துவிடுவதாக தொலைப்பேசியில் மிரட்டினார். மேலும் எனது வீட்டுக்கு ஆள்களை அனுப்பி அச்சுறுத்தினார்'' என புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் பத்மராஜ் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 504, 506 மற்றும் 385 ஆகிய 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு, பத்மராஜை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர். இதையடுத்து புதன்கிழமை மாலை போலீஸார் காங்கிரஸ் நிர்வாகி பத்மராஜை அவரது வீட்டில் கைது செய்தனர்.
முன்னதாக பத்மராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன் நான் பாஜகவில் இருந்தேன். கோபாலய்யா காங்கிரஸில் எம்எல்ஏவாக இருந்தார். அவர் பாஜகவுக்கு தாவுவதற்கு முன்னர், அரசின் ஒப்பந்தங்களை பெற்றுதருவதற்காக அவருக்கு பணம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தரவில்லை. அதனால் நான் கொடுத்த பணத்தை கேட்டேன். அதனை கொலை மிரட்டல் என புகார் கொடுத்துள்ளார்'' என்றார்.